Thursday, June 19, 2008

கும்பகர்ணன் தன் தூக்கத்தை உனக்குத் தந்தானோ!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்.

மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்

நாற்றத் துழாய் முடி நாராயணன் நம்மால்

போற்றப் பறை தரும் புண்ணியனால் பண்டு ஒரு நாள்

கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கரணனும்

தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ

ஆற்ற அனந்தல் உடையாய் அருங்கலமே

தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்.


பாவை நோன்பு இருந்து சொர்க்கம் போக நம்பிக்கையா இருக்கற பொண்ணே! கதவையும் திறக்காம கூப்பிட்ட குரலுக்கும் பதில் கொடுக்காம அப்படி என்னத் தூக்கமோ? நாம பக்தியோட சேவிச்சா நமக்கு வேண்டியறதத் தர்ற நாராயணனால கொல்லப்பட்ட கும்பகர்ணன் தன்னோட தூக்கத்த உனக்குக் கொடுத்துட்டு யமன்கிட்ட போயிட்டானோ? ஆழ்ந்த தூக்கத்துல விழுந்திருக்கற தோழியே! நீ எங்க குழுவுல ஒரு விளக்கு! வா வ்ந்து கதவத்திற! நாமெல்லாம் சேர்ந்து நோன்பிருப்போம்!

மாமன் மகளே! கதவைத் திறவாய்!


தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூபம் கமழத் துயிலணைமேல் கண் வளரும்

மாமான் மகளே மணிக் கதவம் தாழ் திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன் மகள் தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந் துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.


மாமன் மகளே! ரத்தினங்கள் ஜொலிக்கற மாடத்த சுத்தி விளக்கெரியறது; அருமையான பத்தி மணம் கமழறது. நீயோ நன்னா பஞ்சணை மேல உன்னையே மறந்து இன்னும் தூங்கிண்டு இருக்கறயே! கதவத் திற முதல்ல! மாமி! உங்க பொண்ண எழுப்புங்கோ! அவ என்ன செவிடா இல்லை ஊமையா? இல்லை சோர்வடஞ்சுட்டாளா? இல்லை யாராவது இப்படித் தூங்கறதுக்கு சாபம் நாம எல்லாரும் அந்த மாயன், மாதவன், வைகுந்தனோட நாமத்தச்ச் சொல்லீ அவள எழுப்புவோம்.


Monday, June 2, 2008

கோதுகலம் உடைய பாவாய் எழுந்திராய்!

கீழ் வானம் வெள்ளென்று எருமை சிறு வீடு

மேய்வான் பரந்தன காண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னைக்

கூவுவான் வந்து நின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறை கொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்று நாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாயாய்.


உற்சாகமுள்ள பெண்ணே! கிழக்க சூரியனோட வருகையால சிவந்த வானம் இப்ப வெள்ளையா மாற ஆரம்பிச்சுடுத்து. பசியோட உள்ள எருமைகளெல்லாம் இப்ப மேயறதுக்காக பக்கத்துல உள்ள புல்வெளிக்குப் போயாச்சு. நாங்களும் மத்த கோபியற எழுப்பி இப்ப உன்னைய எழுப்ப வந்திருக்கோம். சீக்கரம் எழுந்திருடீ! நாம எல்லாருமா சேர்ந்து அந்த பகவானோட மகிமையப் பாடினா நாம வேண்டறது எல்லாத்தையும் அவன் தருவான். கேசி அசுரனோட வாயை பிளந்து கொன்ற அந்த பகவான் - கம்சனோட சபையில உள்ள மாவீரர்களெல்லாரையும் கொன்ற தெய்வங்களுக்கெல்லாம் தெய்வமான அந்த நாராயணன், நமக்கு எல்லா நலத்தையும் கொடுப்பான். அதனால, சீக்கிரமா எழுந்து வாடி!


நாராயணனோட மகிமையைப் பாடுவோம்!

கீசு கீசு என்று எங்கும் ஆனைச் சாத்தான் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ பேய்ப் பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கை பேர்த்து

வாச நறும் குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசை படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண் பிள்ளாய் நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய் திறவேலோர் எம்பாவாய்.


ஏய் பேய்ப் பெண்ணே! கீச்சு கீச்சுன்னு கத்தற ஆனைச்சாத்தான் பட்சிகளோட சத்தம் உன் காதுல விழலையா? பொழுது விடிஞ்சாச்சு. உன்னைச்சுத்தி உள்ளவா எல்லாம் எழுந்தாச்சு. நறுமணமுள்ள பூக்களத் தலையில வச்சுண்டு மத்த கோபிகளெல்லாம் மத்தால தயிர் கடையற சத்தம் உனக்கு கேக்கலை? அவா போட்டுண்டு இருக்கற காசுமாலையும் வளையலும் கிலுகிலுக்கற சத்தம் கூட உனக்குக் கேக்கலையா? நாங்களெல்லாம் கேசவனைப் பாடும் போது உன்னால மட்டும் எப்படித் தூங்க முடியறது? அழகான தோழியே! வா! வந்து கதவத் திற. நாம எல்லரும் சேர்ந்து அந்த நாராயணனோட மகிமையைப் பாடுவோம்!