Tuesday, February 26, 2008

அரி என்ற பகவான் நாமகோஷம் கேக்கலயா?

எனக்குப் பிடிச்ச திருப்பாவைப் பாசுரங்கள்ல இதுவும் ஒண்ணு. ஆண்டாள் இதுல சொல்லற உவமைகள் எல்லாமே ரொம்ப நன்னா இருக்கு.


புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலையோ

பிள்ளாய் எழுந்திராய் பேய் முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்


அடியே இளம்பெண்ணே! பொழுது விடிஞ்சாச்சுன்னு பறவைகளெல்லாம் சத்தம் போடறதப் பாரு. கருடனை வாகனமாகக் கொண்டிருக்கற நம்ம பகவானோட கோவில்ல வெண்சங்கு ஊதறாளே, அது உனக்குக் கேக்கலையா? எழுந்திருந்து பாரு! சின்னகுழந்தையா இருந்தப்ப போதனைங்கற அரக்கியோட பாலை உறிஞ்சினப்பவே அவளோட உயிரையும் குடிச்சு, தன்னைக் கொல்ல வந்த அரக்கனைத் தன்னோட சின்னக் காலாலையே உதைச்சுக் கொன்னானே பாற்கடல்ல ஆதிசேஷன் மேல சயனிக்கற நம்ம பகவான், அவனை மனசுலயே பூஜை செய்து முனிவர்களும், யோக சித்தர்களும் தங்களோட தவத்துலேந்து எழுந்து 'அரி'ன்னு கோஷம் எழுப்பறா. அந்த சத்தம் நம்ம மனசை குளிர்விக்கும்டீ. அத கேட்டு நம்ம பாவை விரதத்தை தொடர எழுந்திருடீ பொண்ணே!


(விரதம் தொடர்வாள் கோதை...)

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க...


மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்

தூய பெரு நீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி விளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.


மதுராவுல பொறந்த வீரம் மிக்கவனான அந்த மாயக்கண்ணணை, யமுனா நதியில கோபியரோட விளையாடற அந்த பகவானை, ஆயர் குலத்துல உதிச்ச அந்த விளக்கொளி போன்ற பிரகாசமானவனை, தான் மகனாகப் பொறந்ததுனாலேயே தன்னோட அம்மாவுக்கு மேன்மையைத் தந்தவனை நாம எல்லாரும் போய் சிரத்தையோட பூக்களைக் கொண்டு அர்ச்சனை பண்ணி நமஸ்காரம் செய்து, அவனோட நாம கீர்த்தனங்களைப் பாடி, நம்ம மனசாலேயே சேவிச்சோம்னா, நாம போன ஜன்மங்கள்ளயும், இந்த ஜன்மத்துலேயும் எதேனும் பாவம் பண்ணிருந்தாலும் இனிமேல் வர்றப்போற பிறப்புல எதேனும் பாவம் பண்ணினாலும் அந்தப் பாவங்களெல்லாம் நெருப்புல விழுந்த தூசியப்போல பொசுங்கிடுமாக்கும். அதனால அந்த மாயக்கண்ணனை நாம எல்லாரும் பக்தி சிரத்தையோடு சேவிப்போம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

வாழ உலகினில் ஆழி மழை பெய்!

தமிழுக்கு '' அழகு. ஆனா நம்மள்ள நிறைய பேருக்கு ''னாவே வராது. 'தமிழ் அழகான மொழி'ன்னு சொல்லச் சொன்னா, 'தமிள் அளகான மொளி'னு சொல்லுவோம். இந்தப் பாசுரத்துல கோதை என்ன அழகா ''னாவ உபயோகிச்சிருக்கா தெரியுமாவருண பகவான்கிட்ட மழையைக் கொண்டு வரச்சொல்லிக் கேக்கறா கோதை. அதுவும் எப்படி பெய்யணுமாம் பாருங்கோ...


ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


வருண பகவானே! கடல்போன்ற பெருமழையைக் கொண்டு வரும் அண்ணலே! நீ நன்னா ஜோன்னு மழை பெய்ய வைக்கணும். அதுல குறையேதும் வச்சுடாதே! எப்படிப் பெய்யணும் தெரியுமா? முதல்ல நீ கடலெல்லாம் வற்றும்படியா கடலுக்குள்ள புகுந்து அந்தத் தண்ணீரெல்லாத்தையும் உறிஞ்சிண்டு மேலே போய், ஊழி முதல்வனான ஜகந்நாதன் திருமேனியப் போல உன்னோட மேகங்கள் கருமையாகி, பரந்த தோள்களுடைய பத்மநாபன் கையில இருக்கற சக்கரத்தைப் போல மின்னலடிச்சு, அவன்கிட்ட இருக்கற வலம்புரிச்சங்கு அதிர்றது போல இடி இடிச்சு, கண்ணனோட சாரங்க வில்லுல இருந்து நிக்காம புறப்படற அம்பு மழை மாதிரி நீயும் நிறுத்தாம மழையைக் கொட்டோகொட்டுனு கொட்டணும். அப்படி நீ கொடுக்கற மழை, இந்த லோகத்துல செழிப்பக் கொண்டுவந்து எல்லாரையும் நன்னா வாழ வைக்கணும். நாங்களும் அதுல மார்கழி நீராடணும். வருண பகவானே! அப்படி ஒரு மழையைக் கொண்டுவா!


(விரதம் தொடர்வாள் கோதை...)

என்னலாம் கிடைக்கும் தெரியுமா?

இந்த மூணாம் பாசுரத்துல பாவை விரதம் இருக்கறதுனால என்னலாம் கிடைக்கும்னு சொல்லறா கோதை.


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து

ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்


வாமனனா அவதரிச்சு மஹாபலி கிட்ட மூணே அடி மண் கேட்டு, த்ரிவிக்ரமனா வளர்ந்து, தன்னோட ஒரு அடியால பூமியையும் ரெண்டாவது அடியால மேல் லோகத்தையும், மூணாவது அடியா தன்னோட திருப்பாதத்தை மஹாபலியோட தலைல வச்சு அவனுக்கு முக்தி கொடுத்தானே அந்த உத்தமன், அவனை நாம போற்றிப் பாடி நம்ம பாவை நோன்புக்கு யமுனைல குளிச்சோமானா, இந்த லோகத்துல மாசம் மூணு தடவை நன்னா மழை பெய்ஞ்சு, வறட்சியும் வறுமையும் அழிஞ்சுடும். இப்படிப் பெய்யற மழையால நாட்டுல பசுமை ஏற்பட்டு அதனால செந்நெல் நன்னா விளைஞ்சு, அந்த வயல்களுக்கு நடூல மீன்களெல்லாம் விளையாடும். தேனை நன்னா குடிச்சுட்டு அந்த மயக்கத்துல வண்டெல்லாம் குவளைப்பூ இதழ்களுக்கு இடைல தூங்கிடும். அப்பறம் கேளுங்கோ! பால் நிறைஞ்ச மடுவுள்ள பசுவெல்லாம் அந்த மடுவத் தொட்டவுடனேயே வச்ச குடத்தையெல்லாம் பாலாலையே நிரப்பிடும். இப்படி லோகமே செழிப்படையறதுக்காக நாம அந்த த்ரிவிக்ரமனை நோக்கிப் பாவை நோன்பிருப்போம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

Thursday, February 21, 2008

எதெல்லாம் செய்யணும்... எதெல்லாம் செய்யக்கூடாது...

வையத்து வாழ்வீர்காள் நாமும் நம்பாவைக்குச்

செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்

பையத் துயின்ற பரமனடி பாடி

நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி

மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்

செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்

ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி

உய்யுமாற் எண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.


உலகத்துல வாழறவாழெல்லாம் நாம பாவை விரதம் முழுக்க என்ன என்ன செய்யணும்னு கேட்டுக்கோங்கோ! பாற்கடல்ல ஆதிசேஷன் மேல மெல்ல தூங்கிண்டு இருக்கானே பரந்தாமன், அவனோட நாமாவளியைச் சொல்லி அவன் புகழைப் பாடணும். இந்த முப்பது நாளும் நெய் பால் ரெண்டையும் சேர்க்காம இருக்கணும். கார்த்தால சீக்கரமா குளிச்சுடணும். கண் மை வச்சுக்கக் கூடாது, பூவையும் வச்சுக்காதீங்கோ! செய்யக்கூடாத தப்பு ஒண்ணையும் செஞ்சுடாதேள். பேசக்கூடாத தப்பான பேச்சு பேசிடாதீங்கோ. ஏழைகளுக்கும், தேவைப்பட்டவாளுக்கும் நிறைய உதவி செய்யணும். நாம இந்த வாழ்க்கையில நேர்மையான நல்ல வழியிலயே போய் பகவானை அடைய பிரார்த்தனை செய்வோம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

மார்கழித் திங்களல்லவா…

மார்கழி மாசம்னதும் நினைவுக்கு வர்றது பஜனையும் அதுக்கப்பறம் கிடைக்கற வெண் பொங்கலும், தயிர்சாதமும் தான். அப்பாவிடமும் அம்மாவிடமும் " நாளைக்குக் கார்த்தால பஜனைக்குப் போகணும். நாலரை மணிக்கு எழுப்பி விடுங்கோ"ன்னு தெரியாத்தனமா சொல்லிட, அவாளும் நாலரை மணிலேந்தே "கிஷோர்! மணி நாலரை... கிஷோர்! மணி நாலு முப்பத்தஞ்சு..." அப்படின்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் எழுப்பி, நானும் ஊர்ல எல்லாரும் எழுந்திருச்ச அப்பறம் அஞ்சு மணிக்கு எழுந்து ஏன் என்னைய நாலரைக்கு எழுப்பிவிடலைன்னு சண்டை போட்டுட்டு அவா தர்ற காப்பிய குடிச்சுட்டு குளிக்காம ஒரு ஸ்வெட்டரயும் அரை ட்ராயரயும் போட்டுண்டு கோவிலுக்கு ஓடி "ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா"ன்னு பாடறேன் பேர்வழின்னு கத்தி நன்னா தூங்கிண்டு இருக்கற எல்லாரையும் எழுப்பிவிட்ட காலம் ஒண்ணு உண்டு. அப்பறம் பத்தாங்க்ளாஸ் போன அப்பறம் அதெல்லாம் விட்டுப்போச்சு. சரி! சரி! இப்ப நம்ம ஆண்டாள் இந்த பாசுரத்துல என்ன சொல்லறான்னு பார்ப்போம்.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


"மாதங்களில் நான் மார்கழி"ன்னு கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதைல சொன்ன மார்கழி மாசம் இது. அதுவும் நிலா நிறைஞ்சு இருக்கற பௌர்ணமியாக்கும். செல்வமும் லக்ஷணமும் நிறைஞ்ச ஆயர்ப்பாடி பொண்களே! எல்லாரும் வாங்கோ! நாம எல்லாரும் குளிச்சுட்டு நம்ம விரும்பறத எல்லாம் தர்ற நாராயணனைப் போய்ச் சேவிப்போம். அவன் யாரு தெரியுமா? கையில கூர்மையான வேல வச்சுண்டு கண்ணனுக்கு ஏதாச்சும் தீங்கு வருமானா கொடுந்தொழில் செய்வானே நந்தகோபன், அவனோட புத்திரனாக்கும். அழகான கண்ணோட விளங்கற யசோதையோட சிங்கக்குட்டியாக்கும். மேகம் போல கருத்த தேகம் உடையவன் - மத்யான சூரியனைப்போல பிரகாசமான முகம் கொண்டவனாக்கும். நாம அவன்கிட்ட சரணடைஞ்சு பாவை விரதமிருந்து நாராயணனோட அருளையும் உலகத்துல இருக்கறவாளோட ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)