Tuesday, February 26, 2008

என்னலாம் கிடைக்கும் தெரியுமா?

இந்த மூணாம் பாசுரத்துல பாவை விரதம் இருக்கறதுனால என்னலாம் கிடைக்கும்னு சொல்லறா கோதை.


ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும் மாரி பெய்து

ஓங்கு பெறும் செந் நெல் ஊடு கயலுகளப்

பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்க குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்


வாமனனா அவதரிச்சு மஹாபலி கிட்ட மூணே அடி மண் கேட்டு, த்ரிவிக்ரமனா வளர்ந்து, தன்னோட ஒரு அடியால பூமியையும் ரெண்டாவது அடியால மேல் லோகத்தையும், மூணாவது அடியா தன்னோட திருப்பாதத்தை மஹாபலியோட தலைல வச்சு அவனுக்கு முக்தி கொடுத்தானே அந்த உத்தமன், அவனை நாம போற்றிப் பாடி நம்ம பாவை நோன்புக்கு யமுனைல குளிச்சோமானா, இந்த லோகத்துல மாசம் மூணு தடவை நன்னா மழை பெய்ஞ்சு, வறட்சியும் வறுமையும் அழிஞ்சுடும். இப்படிப் பெய்யற மழையால நாட்டுல பசுமை ஏற்பட்டு அதனால செந்நெல் நன்னா விளைஞ்சு, அந்த வயல்களுக்கு நடூல மீன்களெல்லாம் விளையாடும். தேனை நன்னா குடிச்சுட்டு அந்த மயக்கத்துல வண்டெல்லாம் குவளைப்பூ இதழ்களுக்கு இடைல தூங்கிடும். அப்பறம் கேளுங்கோ! பால் நிறைஞ்ச மடுவுள்ள பசுவெல்லாம் அந்த மடுவத் தொட்டவுடனேயே வச்ச குடத்தையெல்லாம் பாலாலையே நிரப்பிடும். இப்படி லோகமே செழிப்படையறதுக்காக நாம அந்த த்ரிவிக்ரமனை நோக்கிப் பாவை நோன்பிருப்போம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

No comments: