Wednesday, February 20, 2008

தெய்வீகக் காதல்

ந்து சமயத்திலும், இனிய இசையிலும் இளந்தமிழிலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவன் நான். இசையில் இளையராஜா முதல் இன்றைய .ஆர்.ரஹ்மான் வரை நிறைய பாடல்களைக் கேட்டிருந்தாலும் கூட இலக்கியத்தில் சில படைப்புக்களையே படித்துள்ளேன். திருக்குறள், புறநானூறு இவற்றைக் கூட முழுமையாகப் படித்ததில்லை. அப்பொழுதுதான் ஒரு நாள் கண்ணதாசனின் 'அர்த்தமுள்ள இந்துமதம்' புத்தகத்தைப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் 'வாரணமாயிரம்' பாசுரத்தின் முதல் பாடலைப் படித்தபோதே நாச்சியார் திருமொழியின் மீது ஆர்வம் பிறந்தது. பின், 'ஆண்டாள் - தமிழை ஆண்டாள்' பகுதியைப் படித்தபொழுது முழுவதும் ஈர்க்கப்பட்டேன். நாச்சியார் திருமொழியில் ஆறாம் திருமொழியான வாரணமாயிரத்தின் பத்துப் பாசுரங்களையும் படித்து முடித்தேன். தமிழ்மொழியின் சொற்ச்சுவையையும் பொருட்சுவையையும் இனிதென்று கேள்விப்பட்டு இருக்கின்றேன்; ஆனால், முதன்முறையாக இப்பத்துப் பாசுரங்களிலும் அதை அனுபவித்தேன். அதுவும் கோதை கண்ணன் மேல் கொண்ட காதல் சுவையுடன் கூடிய பாசுரங்கள் இவை! படிக்கப் படிக்கத் தெவிட்டாத பாசுரங்கள்! ஒரு கன்னியின் காதல் உணர்வுகளும் கனவுகளும் எப்படி இருக்கும்? அதுவும் அந்தக்கன்னி கண்ணனையே காதலித்தால்? இவற்றிற்கு விடையே திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும்! விடைகாண விரைந்தேன் - கோதையின் காதலை எண்ணி வியந்தேன்.



சென்ற சனிக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று வந்தேன். கோதை கண்ணனைக் காதலித்த பூமி அது. அப்பொழுதுதான் சூடிக்கொடுத்த சுடர்க்கொடியின் காதலை 'ப்ளாக்'-ல் சொல்ல வேண்டுமென்று ஆவல் பிறந்தது. இது இப்பொழுது ஆவலாகவே இருந்தாலும், நானும் இன்னும் நிறைய தெரிந்து கொள்ள ஒரு கருவியாக இருக்குமென்று கருதுகிறேன்.


மதுரைத்திட்டமும் (http://tamil.net/projectmadurai/), http://www.sundarasimham.org-ம், http://www.sadagopan.org-ம் நான் ஆண்டாளின் பாசுரத்தை அனுபவிக்க உதவி செய்கின்றன. இவற்றுக்கும் இவற்றை நிர்வகிப்பவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி!


மீண்டும் சொல்கிறேன்: எனது ஆர்வத்தின் பிறப்பே இந்த 'ப்ளாக்'. ஏதேனும் குறையிருப்பின் திருத்தம் சொல்லுங்கள், திருத்திக்கொள்கின்றேன்.


கோதையின் தந்தை பெரியாழ்வாரின் திருப்பல்லாண்டின் முதற்பாசுரத்துடன் மணிவண்ணனைத் துதித்து


பல்லாண்டுபல்லாண்டு பல்லாயிரத்தாண்டு

பலகோடிநூறாயிரம்

மல்லாண்டதிண்தோள்மணிவண்ணா. உன்

செவ்வடிசெவ்விதிருக்காப்பு.


நான் இந்த 'ப்ளாகை'த் தொடங்குகின்றேன்.

கோதையும் கண்ணனைக் காதலிக்கத் தொடங்குகிறாள்


திவ்யப்ப்ரபந்தத்தின் பாசுரங்களின் பெருமைகளைச் சிறப்பிப்பனவே தனியன்கள். திருப்பாவைக்கு மூன்று தனியன்கள். பராசரபட்டரின் தனியன் ஒன்று, உய்யக்கொண்டாரின் தனியன்கள் இரண்டு.


பராசர பட்டர் அருளியது

நீளாதுங்க ஸ்தநகரி தடீஸுப்த முத்போத்ய க்ருஷ்ணம்

பாரார்த்த்யம் ஸ்வம் ச்ருதி சதசிரஸ்ஸித்த மத்யாபவந்தீ

ஸ்வோச்சிஷ்டாயாம் ஸரஜிநிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே

கோதாதசஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்துபூய


நப்பினைப்பிராட்டியின் மலை போன்ற திருமார்பினில் உறங்கிக்கொண்டிருந்த திருமாலை எழுப்பிய கோதையை நான் துதிக்கின்றேன். வேதங்களில் கூறப்பட்டுள்ளபடி தன்னையே கிருஷ்ணனுக்குக் அர்ப்பணித்த ஆண்டாளே! தானணிந்து கொடுத்த மாலையாலும் கண்ணனைக் கவர்ந்த பிராட்டியே! உனக்கு எனது வணக்கங்கள்.


உய்யக்கொண்டார் அருளியது

அன்ன வயற்புதுவை ஆண்டாள் அரங்கற்குப்

பன்னு திருப்பாவைப் பல்பதியம்

இன்னிசையால் பாடிக்கொடுத்தாள் நற்பாமாலை

பூமாலை சூடிக் கொடுத்தாளைச் சொல்லு.


பாலிலிருந்து நீரைப்பிரிக்கும் அன்னப்பறவைகள் மிகுந்த வில்லிபுத்தூரின் ஆண்டாள் ரங்கமன்னாரான வடபத்ரசாயிக்குத் திருப்பாவை என்னும் நற்பாமாலையைப் பாடினாள். அவளே, தானணிந்த பூமாலையை இறைவனுக்கு அணிவித்து மகிழ்ந்த சூடிக்கொடுத்த சுடர்க்கொடி. ஆண்டாளின் பெருமையை எல்லோரும் கூறுவோம்.


சூடிக் கொடுத்தாள் சுடர்க் கொடியே தொல்பாவை

பாடி அருளவல்ல பல்வளையாய்

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி ஒன்ற இம்மாற்றம்

நாங்கடவா வண்ணமே நல்கு.


சூடிக்கொடுத்த சுடர்க்கொடியே! நீ அருளிச்செய்த திருப்பாவையை நாங்களும் பின்பற்ற வழி செய். எப்பொழுதும் எங்கள் இறைவனோடிருந்து நாங்களும் அவனையடைய வழி செய். இறைவனோடு எங்கள் பக்கம் வந்து எங்கள் விரதத்திற்கு உதவி செய்.


திருப்பாவையின் பெருமையுரைக்கும் பாடல்களில் என்னை மிகவும் கவர்ந்தது இந்தப்பாடல்:


பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடி காட்டும்

வேதம் அனைத்துக்கும் வித்தாகும் கோதை தமிழ்

ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை

வையம் சுமப்பது வம்பு.


முப்பது பாடல்களை 'ஐயைந்தும் ஐந்தும்' எனக் குறிக்கும் தமிழின் சிறப்புத்தான் என்னே!


(விரதமிருப்பாள் கோதை...)

No comments: