Thursday, February 21, 2008

மார்கழித் திங்களல்லவா…

மார்கழி மாசம்னதும் நினைவுக்கு வர்றது பஜனையும் அதுக்கப்பறம் கிடைக்கற வெண் பொங்கலும், தயிர்சாதமும் தான். அப்பாவிடமும் அம்மாவிடமும் " நாளைக்குக் கார்த்தால பஜனைக்குப் போகணும். நாலரை மணிக்கு எழுப்பி விடுங்கோ"ன்னு தெரியாத்தனமா சொல்லிட, அவாளும் நாலரை மணிலேந்தே "கிஷோர்! மணி நாலரை... கிஷோர்! மணி நாலு முப்பத்தஞ்சு..." அப்படின்னு அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தரம் எழுப்பி, நானும் ஊர்ல எல்லாரும் எழுந்திருச்ச அப்பறம் அஞ்சு மணிக்கு எழுந்து ஏன் என்னைய நாலரைக்கு எழுப்பிவிடலைன்னு சண்டை போட்டுட்டு அவா தர்ற காப்பிய குடிச்சுட்டு குளிக்காம ஒரு ஸ்வெட்டரயும் அரை ட்ராயரயும் போட்டுண்டு கோவிலுக்கு ஓடி "ராதே ராதே ராதே ராதே ராதே கோவிந்தா"ன்னு பாடறேன் பேர்வழின்னு கத்தி நன்னா தூங்கிண்டு இருக்கற எல்லாரையும் எழுப்பிவிட்ட காலம் ஒண்ணு உண்டு. அப்பறம் பத்தாங்க்ளாஸ் போன அப்பறம் அதெல்லாம் விட்டுப்போச்சு. சரி! சரி! இப்ப நம்ம ஆண்டாள் இந்த பாசுரத்துல என்ன சொல்லறான்னு பார்ப்போம்.


மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்

நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்

சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்

கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்

ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்

கார் மேனி செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்

நாராயணனே நமக்கே பறை தருவான்

பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.


"மாதங்களில் நான் மார்கழி"ன்னு கிருஷ்ண பரமாத்மா பகவத்கீதைல சொன்ன மார்கழி மாசம் இது. அதுவும் நிலா நிறைஞ்சு இருக்கற பௌர்ணமியாக்கும். செல்வமும் லக்ஷணமும் நிறைஞ்ச ஆயர்ப்பாடி பொண்களே! எல்லாரும் வாங்கோ! நாம எல்லாரும் குளிச்சுட்டு நம்ம விரும்பறத எல்லாம் தர்ற நாராயணனைப் போய்ச் சேவிப்போம். அவன் யாரு தெரியுமா? கையில கூர்மையான வேல வச்சுண்டு கண்ணனுக்கு ஏதாச்சும் தீங்கு வருமானா கொடுந்தொழில் செய்வானே நந்தகோபன், அவனோட புத்திரனாக்கும். அழகான கண்ணோட விளங்கற யசோதையோட சிங்கக்குட்டியாக்கும். மேகம் போல கருத்த தேகம் உடையவன் - மத்யான சூரியனைப்போல பிரகாசமான முகம் கொண்டவனாக்கும். நாம அவன்கிட்ட சரணடைஞ்சு பாவை விரதமிருந்து நாராயணனோட அருளையும் உலகத்துல இருக்கறவாளோட ஆசீர்வாதத்தையும் பெறுவோம்.


(விரதம் தொடர்வாள் கோதை...)

No comments: