Tuesday, February 26, 2008

வாழ உலகினில் ஆழி மழை பெய்!

தமிழுக்கு '' அழகு. ஆனா நம்மள்ள நிறைய பேருக்கு ''னாவே வராது. 'தமிழ் அழகான மொழி'ன்னு சொல்லச் சொன்னா, 'தமிள் அளகான மொளி'னு சொல்லுவோம். இந்தப் பாசுரத்துல கோதை என்ன அழகா ''னாவ உபயோகிச்சிருக்கா தெரியுமாவருண பகவான்கிட்ட மழையைக் கொண்டு வரச்சொல்லிக் கேக்கறா கோதை. அதுவும் எப்படி பெய்யணுமாம் பாருங்கோ...


ஆழி மழைக் கண்ணா ஒன்று நீ கை கரவேல்

ஆழி உள் புக்கு முகந்து கொடு ஆர்த்து ஏறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழிய் அம் தோளுடைப் பற்பனாபன் கையில்

ஆழி போல் மின்னி வலம்புரி போல் நின்று அதிர்ந்து

தாழாதே சார்ங்க முதைத்த சர மழை போல்

வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்


வருண பகவானே! கடல்போன்ற பெருமழையைக் கொண்டு வரும் அண்ணலே! நீ நன்னா ஜோன்னு மழை பெய்ய வைக்கணும். அதுல குறையேதும் வச்சுடாதே! எப்படிப் பெய்யணும் தெரியுமா? முதல்ல நீ கடலெல்லாம் வற்றும்படியா கடலுக்குள்ள புகுந்து அந்தத் தண்ணீரெல்லாத்தையும் உறிஞ்சிண்டு மேலே போய், ஊழி முதல்வனான ஜகந்நாதன் திருமேனியப் போல உன்னோட மேகங்கள் கருமையாகி, பரந்த தோள்களுடைய பத்மநாபன் கையில இருக்கற சக்கரத்தைப் போல மின்னலடிச்சு, அவன்கிட்ட இருக்கற வலம்புரிச்சங்கு அதிர்றது போல இடி இடிச்சு, கண்ணனோட சாரங்க வில்லுல இருந்து நிக்காம புறப்படற அம்பு மழை மாதிரி நீயும் நிறுத்தாம மழையைக் கொட்டோகொட்டுனு கொட்டணும். அப்படி நீ கொடுக்கற மழை, இந்த லோகத்துல செழிப்பக் கொண்டுவந்து எல்லாரையும் நன்னா வாழ வைக்கணும். நாங்களும் அதுல மார்கழி நீராடணும். வருண பகவானே! அப்படி ஒரு மழையைக் கொண்டுவா!


(விரதம் தொடர்வாள் கோதை...)

No comments: